கொரோனா நோயாளிகள் பொது இடங்களுக்கு வந்தால் புகார் தெரிவிக்கலாம்- கலெக்டர் சி.கதிரவன் தகவல்

கொரோனா நோயாளிகள் பொது இடங்களுக்கு வந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-05-24 00:14 GMT
ஈரோடு
கொரோனா நோயாளிகள் பொது இடங்களுக்கு வந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார். 
6,558 பேர் வீட்டு தனிமை
தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க, கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 6 ஆயிரத்து 558 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். மேலும் ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளில் 120 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், 499 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
பரிசோதனை
நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை மேற்கொள்வதற்காகவும், தொற்று உள்ளவர்கள் சிகிச்சை மேற்கொள்வதற்காகவும் தனித்தனி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. எனவே, நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள், வீடுகளில் கழிவறையுடன் கூடிய தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையில், மாவட்டம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களில் தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் மிகச்சிறந்த சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவல் ஏற்படுவது தடுக்கப்படும்.
அவசர கால கட்டுப்பாட்டு மையம்
எனவே, நோய் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் பொது இடங்களுக்கு வரக்கூடாது. அவ்வாறு வருவது கண்டறியப்பட்டால், அருகில் உள்ள பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கும் கீழ்கண்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தை 04241077, 04242260211, 9791788852 ஆகிய எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலும், தகவல் தெரிவிக்கும் தனிநபர்களின் விவரங்கள் ஏதும் வெளியிடப்பட மாட்டாது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்