ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று; கடல் சீற்றம் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்

ெஜகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது, கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர்.

Update: 2021-05-25 18:39 GMT
கோட்டைப்பட்டினம்:
அறிவிப்பு 
இந்திய மேற்கு மத்திய வங்காள விரிகுடா மற்றும் தமிழ்நாடு கடல் பகுதியில் தென்மேற்கு திசையில் நான்கு நாட்களுக்கு பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடந்த 22-ந்தேதி  அன்று புதுக்கோட்டை மாவட்டம் மீன்வளத் துறையினரால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது. அன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.
பலத்த காற்று-கடல் சீற்றம்
இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசியது. கடல் பயங்கர சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விசைப்படகுகள் காற்றின் வேகம் தாங்க முடியாமல் இழுத்துக்கொண்டு சென்றது. பின்னர் மீனவர்கள் படகினை மீண்டும் கட்டி இழுத்து வந்து பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்தனர். விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்றின் மீது மோதிக்கொண்டன. இதனால் படகு சேதமடையும் சூழல் ஏற்பட்டது 
பாதுகாப்பான இடத்தில்...
இதனையடுத்து அங்கு வந்த மீனவர்கள் படகினை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்தனர். கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் உள்ள மின் கம்பம் காற்றின் வேகம் தாங்க முடியாமல் சாய்ந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள மரங்கள் காற்றுக்கு பலமாக ஆடியது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்சார வாரியத்தினர் அங்கு வந்து அதனை சரி செய்தனர். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் கடற்கரைப்பகுதியில் பலத்த காற்று வீசியதால் அப்பகுதியில் பதற்றமாக நிலை காணப்பட்டது.

மேலும் செய்திகள்