மளிகைக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.9 லட்சம் நகை-பணம் கொள்ளை

மூங்கில்துறைப்பட்டு அருகே மளிகைக்கடை உரிமையாளர் வீ்ட்டில் ரூ.9 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2021-05-28 18:04 GMT

மூங்கில்துறைப்பட்டு


மளிகைக்கடை உரிமையாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கரிம் மகன் நபீஸ்(வயது 28). இவர் தனது வீட்டோடு ‘ஜெராக்ஸ்’ மற்றும் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். 
நபீஸ் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி மற்றும் தாயாருடன் சந்தைப்பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். 

பூட்டு உடைப்பு

இந்த நிலையில் நேற்று மதியம் நபீஸ் வீட்டின் முன் பக்க கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.   பின்னர் அவர்கள் இது குறித்து நபீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவரும் சந்தைப்பேட்டையில் இருந்து புறப்பட்டு வந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் காணப்பட்டது. 

நகை-பணம் கொள்ளை

அதில் இருந்த துணிமணிகள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 20 பவுன் நகை, வெளிநாட்டு பணம் 10 ஆயிரம் ரியால்(ரூ.1 லட்சத்து 90 ஆயிரம்) ஆகியவற்றை காணவில்லை.  நபீஸ் உறவினர் வீட்டுக்கு சென்றதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை போன நகை மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.  

போலீசார் விரைந்தனர்

இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்து திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி தலைமையில் இன்ஸ்பெக்டர் செந்தில் விநாயகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், திருமால் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜவேல், தட்சணாமூர்த்தி ஆகியோர் தலைமையிலான கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டின் கதவுகளில் இருந்த ரேகைகளை பதிவு செய்து, தடயங்களையும் சேகரித்துச் சென்றனர்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து நபீஸ் கொடுத்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்


மேலும் செய்திகள்