மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-05-29 21:46 GMT
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அதிகாரி வேல்முருகன். தனது உதவியாளருடன் கோடாலிகருப்பூர் கொள்ளிடக்கரை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது 2 மாட்டு வண்டிகளில் அரசு அனுமதி இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மணல் ஏற்றி வந்த 2 பேரிடம் விசாரிக்க முயன்றபோது, வண்டிகளில் இருந்து மாடுகளை அவிழ்த்து விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இது குறித்து தா.பழூர் போலீசில் வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தது, கோடாலிக்கருப்பூர் கடைத்தெருவை சேர்ந்த தவமணி மற்றும் சேகர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மணல் கடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்