சாலையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி மூதாட்டி சாவு

நித்திரவிளை அருகே சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-05-29 21:46 GMT
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருகே சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் தவறி விழுந்த மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
மூதாட்டி
நித்திரவிளை அருகே வட்டபழஞ்சி பகுதியை சேர்ந்தவர் மேரி கமலம் (வயது 70). இவர் காஞ்சாம்புறம் பகுதியில் உள்ள ஒரு கடையில் பால் வியாபாரம் செய்து வந்தார். இதற்காக தினமும் அதிகாலையில் எழும்பி வீட்டில் இருந்து கடைக்கு நடந்து செல்வது வழக்கம்.
அந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் பல்வேறு சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலையில் மேரி தங்கம் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். சாலையில் தண்ணீர் தேங்கி நின்றதால் தட்டுத்தடுமாறி நடந்து சென்று கொண்டிருந்தார். 
பரிதாப சாவு
அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். அந்த நேரத்தில் உதவிக்கு யாரும் வராததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். பொழுது விடிந்த பின்பு அந்த வழியாக சென்றவர்கள் மேரி கமலத்தின் உடல் தண்ணீரில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சாலையில் தேங்கிய தண்ணீரில் மூதாட்டி தவறி விழுந்து பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்