நண்பரிடம் இறுதி சடங்குக்கு பணம் கொடுத்துவிட்டு தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை-நம்பியூர் அருகே பரிதாப சம்பவம்

நம்பியூர் அருகே இறுதி சடங்கு செய்ய நண்பரிடம் பணம் கொடுத்துவிட்டு தூக்குப்போட்டு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2021-05-29 22:28 GMT
நம்பியூர்
நம்பியூர் அருகே இறுதி சடங்கு செய்ய நண்பரிடம் பணம் கொடுத்துவிட்டு தூக்குப்போட்டு தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். 
பரோட்டா மாஸ்டர்
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பால்சாமி (வயது 55). இவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் தங்கிக்கொண்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு பல ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு இருந்து வந்ததாக தெரிகிறது. 
இதனால் அடிக்கடி சென்று கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. அக்கம் பக்கத்தினர் வந்து ஆஸ்பத்திரிக்கு அழைத்தனர். ஆனால் அவர் செல்ல மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இறுதி சடங்குக்கு பணம்
இந்தநிலையில் தன்னுடைய நண்பர் ஒருவரை பால்சாமி நேற்று முன்தினம் அழைத்து, "எனக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இனி நீண்டநாள் நான் உயிரோடு இருக்க மாட்டேன். நான் இறந்துவிட்டால் இந்த பணத்தை வைத்து என் இறுதி சடங்குகள் செய்துவிடு" என்று கூறி ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார். 
அதன்பின்னர் நேற்று வீட்டில் இருந்த கேபிள் ஒயரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பால்சாமியின் உறவினர்கள் தஞ்சாவூரில் இருப்பதால் அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்