பனமரத்துப்பட்டி பகுதியில் ஊரடங்கால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் செடியிலேயே பூத்து கருகும்அரளிப்பூக்கள்

செடியிலேயே பூத்து கருகும் அரளிப்பூக்கள்

Update: 2021-05-30 00:02 GMT
பனமரத்துப்பட்டி:
பனமரத்துப்பட்டி பகுதியில் ஊரடங்கால் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாததால் செடியிலேயே அரளிப்பூக்கள் பூத்து கருகுகின்றன.
அரளிப்பூக்கள்
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான திப்பம்பட்டி, தும்பல்பட்டி, கம்மாளப்பட்டி குரால்நத்தம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் அரளிப்பூ சாகுபடியை பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இங்கு ரோஸ் நிறத்திலான அரளிப்பூக்கள் பெருமளவிலும், வெள்ளை, சிகப்பு நிறத்திலான அரளிப்பூக்கள் குறைந்த அளவிலும் உற்பத்தி செய்யப்படுகிறது. 
அறுவடை செய்யப்படும் அரளிப்பூக்கள் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 
போக்குவரத்துக்கு தடை
இந்த நிலையில் கொரோனா ெதாற்றின் 2-வது அலையின் தாக்கம் காரணமாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் நாள்தோறும் உற்பத்தியாகும் அரளிப்பூக்களை விவசாயிகள் பறிக்காமல் செடியிலேயே விட்டு வருகின்றனர். 
இதுகுறித்து அரளிப் பூக்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயி வெங்கடேஷ் என்பவர் கூறுகையில், முழு ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன. திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, திருமணம், கிரகப்பிரவேசம், வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஒத்தி வைத்துள்ளனர்,  இதனால் பூக்களின் தேவை முற்றிலுமாக குறைந்து விட்டது. அரளிப்பூக்களை யாரும் வாங்க முன்வராததால் செடிகளிலிருந்து அவற்றை பறிக்காமல் அப்படியே விட்டுவிடுகிறோம். நாள்தோறும் லட்சக்கணக்கான ஏக்கரில் அரளிப்பூக்கள் செடியிலேயே பூத்து கருகி வீணாகி வருகிறது என்றார்.
இ-பதிவு
மேலும் அரளிப்பூக்களை வாங்கி வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்துவரும் வியாபாரி குணசேகரன் என்பவர் கூறியதாவது:-
பனமரத்துப்பட்டி பகுதியில் இருந்து நாள்தோறும் வழக்கமாக சுமார் 5 டன் முதல் 8 டன் வரையிலான அரளிப்பூக்களை வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வந்தோம். தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக இ-பதிவு பெற்றுதான் பூக்களை கொண்டு செல்ல வேண்டும் என அரசு அறிவித்தது. இதன்படி தோட்டக்கலைத்துறை மூலம் விண்ணப்பித்து இ-பதிவு பெற்றோம். அதில் நாள்தோறும் வெறும் 600 கிலோ பூக்களை மட்டுமே ஒரு வியாபாரி கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 
கடந்த 5 நாட்களாக வெளி மாவட்டங்களுக்கு பூக்களை கொண்டு சென்று வந்தோம். ஆனால் தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பூக்களை கொண்டு வரும் வாகனங்களை இ-பதிவு இருந்தும் போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் பூக்கள் கொண்டு செல்வதை முழுவதுமாக நிறுத்தி விட்டோம். இதன் காரணமாக நாள் தோறும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அரளிப்பூக்கள் செடியிலேயே பூத்து கருகி, உதிர்ந்து மண்ணோடு மண்ணாகி வருகிறது. 
இவ்வாறு அவர் கூறினார். 
அரளிப்பூக்கள் உற்பத்தியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பி பிழைத்து வரும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்