பெரியகுளம் அருகே மரத்திலேயே பழுத்து வீணாகும் மலை வாழைப்பழங்கள் விவசாயிகள் கவலை

ஊரடங்கு எதிரொலியால் பெரியகுளம் அருகே மலை வாழைப்பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன.

Update: 2021-05-30 14:20 GMT

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணைக்கு மேலே அகமலை ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி பகுதியில் ஊரடி, ஊத்துக்காடு, அண்ணாநகர், சுப்பிரமணியபுரம், பேச்சியம்மன் சோலை, கானாமிஞ்சி, அலங்காரம், குண்டேரி, பனங்கொடை, சொக்கன்அலை, கரும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் சுமார் 1,500 ஏக்கருக்கும் மேல் மலை வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. 
இங்கு விளையக்கூடிய மருத்துவ குணமுள்ள மலை வாழைப்பழங்கள் மதுரை, சென்னை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய இடங்களிலுள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. 
விவசாயிகள் கவலை
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக மலை வாழைப்பழங்களை பறித்து வெளியூர் சந்தைகளுக்கு வாகனங்களில் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் வாழைப்பழங்களை பறிக்காமல் மரத்தில் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் மலை வாழைப்பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகி வருகிறது. இதைத்தொடர்ந்து பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு அவர்கள் கவலையில் உள்ளனர். 
எனவே இங்கு விளையும் மலை வாழைப்பழங்ககளை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தமிழக விவசாய சங்க தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் வெற்றிவேல் கூறும்போது, தற்போது நன்கு விளைச்சலான மலை வாழைப்பழங்களை பறிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விளைந்த வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமலும், வெளியூர் சந்தைகளுக்கு கொண்டு செல்ல முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே இதுகுறித்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


மேலும் செய்திகள்