1,496 பேருக்கு கொரோனா

திருப்பூர் மாவட்டத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது. நேற்று 1496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 17 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-05-30 14:57 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்தது. நேற்று 1496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி 17 பேர் பலியாகியுள்ளனர்.
 கொரோனா
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் 2வது அலை தீவிரமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னரும் கொரோனா தொற்று குறையாத நிலையில் வருகிற 7ந் தேதி வரை முழு ஊரடங்கு தளர்வுகளின்றி அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா தொற்றும் குறைந்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 28 ஆயிரத்து 864 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு இருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 1496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
17 பேர் பலி
இதுபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் வரும் வரை இவர்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 563-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் நேற்று கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1085 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 65ஆக உள்ளது. தற்போது மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 18 ஆயிரத்து 35 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதன்படி நேற்று ஒரே நாளில் 17 பேர் பலியாகினர். இதில் 11 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அடங்குவர். இதனால் பலி எண்ணிக்கை மாவட்டத்தில் 463ஆக உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 3வது நாளாக கொரோனா தொற்று குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முழுவதும் கொரோனா கட்டுக்குள் வரும் வரை பொதுமக்கள் அரசு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-------

----
Reporter : S.Thiraviya Raja  Location : Tirupur - Tirupur

மேலும் செய்திகள்