சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், விற்பனை நிலையங்களில் 5 ஆயிரம் மலர் செடிகள் தேக்கம்

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால், விற்பனை நிலையங்களில் 5 ஆயிரம் மலர் செடிகள் தேக்கம் அடைந்து உள்ளன.

Update: 2021-05-30 17:11 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் மலர் செடிகள் விற்பனை நிலையம் உள்ளது. அந்த பூங்காவுக்கு வருகை தரும் வெளிமாநில, வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் தங்களது வீடுகளில் வளர்ப்பதற்காக மலர் செடிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்வார்கள். இதற்காக மலர் மற்றும் அலங்காரத்துக்கான 30 வகை செடிகள் வளர்க்கப்பட்டு, விற்பனைக்காக வைக்கப்படுகிறது. ஒரு செடி ரூ.10 முதல் ரூ.110 வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையில் முழு ஊரடங்கு உத்தரவால் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டது. குறிப்பாக தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள பூங்காக்களும் மூடப்பட்டது. மேலும் சுற்றுலா பயணிகள் வரவில்லை.

இதனால் விற்பனை நிலையத்தில் மலர் செடிகள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்து உள்ளது. வழக்கமாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருகை தருவார்கள். அவர்கள் செடிகளை வாங்கி செல்வதால் விற்று தீர்ந்து விடும். பின்னர் நர்சரியில் புதிதாக வளர்த்து விற்பனைக்காக கொண்டு வரப்படும்.

தற்போது விற்பனை பாதிக்கப்பட்டு, நிலையங்களில் செடிகள் அப்படியே உள்ளது. இருப்பினும் பணியாளர்கள் தொடர்ந்து செடிகளை பராமரித்து வருகின்றனர். இதேபோல் சேரிங்கிராசில் உள்ள தோட்டக்கலை வளாக விற்பனை நிலையத்தில் மலர் செடிகள் விற்பனை ஆகவில்லை. ரோஜா பூங்கா விற்பனை நிலையத்தில் பல்வேறு வகையான ரோஜா செடிகள் விற்பனை செய்யப்படும்.

சுற்றுலா பயணிகள் ஊட்டி ரோஜா செடிகளை விரும்பி வாங்கி செல்வதை காண முடியும். அங்கும் மலர் செடிகள் விற்பனை ஆகாமல் அப்படியே உள்ளது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்காவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர், அலங்கார செடிகள் தேக்கம் அடைந்து இருக்கிறது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, முழு ஊரடங்கு முடிந்த பின்னர் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ள மலர் செடிகள் பெங்களூருவுக்கு அல்லது பெரிய ஓட்டல்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும். அலங்கார, மலர் செடிகள் அதிகமாக வளர்ந்தால், அதன் விலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

மேலும் செய்திகள்