கொரோனா ஊரடங்கு காலத்தில் மது, சாராயம் விற்ற 219 பேர் கைது; 6,275 பாட்டில்கள் பறிமுதல்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மது, சாராயம் விற்ற 219 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 6,275 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

Update: 2021-05-30 17:39 GMT
நாமக்கல்:
டாஸ்மாக் கடைகள் மூடல்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. அந்த வகையில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு ´சீல்´ வைக்கப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்கள், சாராய விற்பனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை உள்ளூர் போலீசாரும், மது விலக்கு போலீசாரும் கண்காணித்து கைது செய்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்திலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
219 பேர் கைது
இந்த சோதனையில் நேற்று முன்தினம் வரை மதுபானங்களை பதுக்கி வைத்த நபர்கள், சட்ட விரோதமாக விற்பனை செய்தவர்கள், சாராயம் காய்ச்சியவர்கள், விற்பனை செய்தவர்கள், மதுபானத்தை கடத்தி சென்றவர்கள் என 219 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக 217 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார் 6,275 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
மதுபாட்டில்களை கடத்த பயன்படுத்திய ஒரு நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இதுதவிர 104 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 280 லிட்டர் சாராயம், 2,290 லிட்டர் சாராய ஊறல் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து போலீசார் அழித்து உள்ளனர். இனிவரும் காலங்களில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்