சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் இருந்து பசியால் போலீஸ் நிலையத்திற்கு வந்த குரங்குகள் போலீசார் உணவு வழங்கினர்

பசியால் போலீஸ் நிலையத்திற்கு வந்த குரங்குகள் வந்தன.

Update: 2021-05-30 17:55 GMT
அன்னவாசல்:
கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. வணிக நிறுவனங்கள், போக்குவரத்து, அனைத்தும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. மற்றொருபுறம் மனிதர்களை நம்பி வாழும் ஐந்தறிவு உயிரினங்களும் ஊரடங்கு உத்தரவால் அவலங்களை சந்தித்து வருகின்றது. கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் நாய்கள், பறவைகள், குரங்குகள், போன்ற ஜீவ ராசிகள் உணவு இல்லாமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. சித்தன்னவாசல் சுற்றுலா தலத்தில் இருக்கும் குரங்குகள் சுற்றுலா தலத்திற்கு வரும் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருகின்றது. இந்தநிலையில் தற்பொழுது ஊடங்கு உத்தரவால் சித்தன்னவாசல் சுற்றுலா தலம் மூடப்பட்டுள்ளது இதனால் குரங்குகள் உணவின்றி தவித்து வருகிறது. இதனை அறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன், நாகராஜ், ஜெயஸ்ரீ உள்ளிட்ட போலீசார் சித்தன்னவாசலில் உள்ள குரங்குகளுக்கு தினமும் உணவுகள் பழங்கள், பொரி வழங்கி பசியை போக்கி மனித நேயத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று போலீசார் சித்தன்னவாசல் செல்லாததால் சில குரங்குகள் சித்தன்னவாசலில் இருந்து போலீசாரை தேடி உணவிற்காக போலீஸ் நிலையம் வந்தது. பின்னர் போலீஸ் நிலையத்திற்கு வந்த குரங்குகளுக்கு இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் பொரி, தண்ணீர், பழங்கள், இளநீர் உள்ளிட்டவைகளை கொடுத்து பசியை தீர்த்து வைத்தனர். போலீசாரின் இந்த செயலை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

மேலும் செய்திகள்