சேலம் மாநகரில் காய்கறி கடையாக மாறிய ஆட்டோக்கள்

காய்கறி கடையாக மாறிய ஆட்டோக்கள்

Update: 2021-05-30 22:05 GMT
சேலம்:
சேலம் மாநகரில் கொரோனா ஊரடங்கு காரணமாக காய்கறி கடையாக ஆட்டோக்கள் மாறி வருகின்றன.
காய்கறி கடை
சேலம் மாநகரில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வசதிக்காக மாநகராட்சி சார்பில் நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
இதனால் சரக்கு ஆட்டோ வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க சில வியாபாரிகள் ஆட்டோவை நாள் வாடகைக்கு எடுத்து அதில் காய்கறி மற்றும் பழங்களை வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். 
ஆட்டோக்களில்...
அஸ்தம்பட்டி, அழகாபுரம், கிச்சிப்பாளையம், சூரமங்கலம், செவ்வாய்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் வீதி, வீதியாக ஆட்டோக்கள் மூலம் காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது. ஆட்டோவில் உள்ள இருக்கையை கழற்றி விட்டு அங்கு காய்கறி மற்றும் பழக்கூடைகளை வைத்து காய்கறி கடையாகவே ஆட்டோவை மாற்றி விட்டனர். 
ஆட்டோவில் காய்கறிகள் விற்பனை நடப்பதால் காய்கறி வியாபாரிகளுக்கும் லாபம் கிடைப்பதோடு ஆட்டோ டிரைவர்களுக்கும் தினமும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை வருமானம் கிடைப்பதாக ஆட்டோ டிரைவர்கள் தெரிவிக்கின்றனர். 
முழு ஊரடங்கால் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்கள், கார் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் வருமானம் இன்றி பரிதவித்து வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு தற்போது காய்கறி வியாபாரிகளால் தினமும் வாடகைக்கு சென்று வரும் சூழல் உருவாகி உள்ளது.
நிவாரணத்தொகை
இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே இது போன்று காய்கறி விற்பனைக்கு வாய்ப்பு கிடைப்பதால் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் வீட்டு வாடகை, கடன் தொகை போன்ற பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் புலம்புகின்றனர். எனவே தமிழக அரசு ஆட்டோ டிரைவர்களுக்கு கொரோனா நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்