திருத்தணி அருகே விபத்து: மின்கம்பம் மீது சரக்கு ஆட்டோ மோதல்; கணவன், மனைவி படுகாயம்

திருத்தணி அருகே காய்கறிகள் ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி படுகாயம் அடைந்தனர். இதனால் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

Update: 2021-05-31 06:25 GMT
பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் எஸ்.பி. கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் கொல்லாபுரி (வயது 48). இவரது மனைவி ஷோபா (37). இவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து நேற்று காலை தங்களுக்கு சொந்தமான சரக்கு ஆட்டோவில் காய்கறிகளை ஏற்றிக்கொண்டு திருத்தணிக்கு வந்து கொண்டிருந்தனர்.

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட மேல் திருத்தணி மாதா கோவில் அருகில் வந்த போது, சரக்கு ஆட்டோ நிலைத்தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொல்லாபுரி மற்றும் அவரது மனைவி ஷோபா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

கணவன், மனைவி காயம்

தகவல் கிடைத்ததும் திருத்தணி போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று சரக்கு ஆட்டோவில் சிக்கிய கணவன், மனைவியை காப்பாற்றி சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சரக்கு ஆட்டோ மின்கம்பத்தில் மோதிய விபத்தில் அந்த மின்கம்பம் சேதம் அடைந்தது. இதனால் அப்பகுதியில் 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

மேலும் செய்திகள்