மந்திராலயாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி; கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு கிடைக்காததால் ஆத்திரம்

கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு கிடைக்காத விரக்தியில் மந்திராலயாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவசாயி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-31 10:09 GMT
வெடிகுண்டு மிரட்டல்
மும்பையில் உள்ள மந்திராலயா பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 12.40 மணியளவில் போன் ஒன்று வந்தது. அப்போது எதிர்முனையில் பேசிய மர்ம நபர், மந்திராலயாவில் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் மந்திராலயா வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இந்தநிலையில் தகவல் அறிந்து போலீசார், வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்களுடன் விரைந்தனர். அவர்கள் அங்குலம், அங்குலமாக சல்லடை போட்டு சோதனை போட்டனர். ஆனால் மந்திராலயா கட்டிடத்தில் வெடிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து 
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

விவசாயி கைது
இந்தநிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், மந்திராலயாவுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது நாக்பூரை சேர்ந்த விவசாயி சாகர் மாந்த்ரே(வயது40) என்பது தெரியவந்தது. அவர் உடனடியாக நாக்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நடந்த விசாரணையில், சாகர் மாந்த்ரேவிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு இழப்பீடு கிடைக்காததால், அரசின் கவனத்தை ஈர்க்க அவர் வெடி குண்டு புரளியை கிளப்பியது தெரியவந்தது.இதுகுறித்து நாக்பூர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெடிகுண்டு புரளியை கிளப்பிய 2 மணி நேரத்தில் அவரை கைது செய்துவிட்டோம். மந்திராலயாவுக்கு போன் செய்ததை அவர் ஒப்புக்கொண்டாா். அவரது நிலம் நீண்ட காலத்துக்கு முன் கையகப்படுத்தப்பட்டதாகவும் அதற்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை என 
கூறினார். மேலும் அவரது கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் இருந்ததால், அரசின் கவனத்தை ஈர்க்க இந்த செயலை செய்து உள்ளார். 1997-ம் ஆண்டு அவரது நிலத்தை டபிள்யு.சி.எல். நிலக்கரி நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. ஆனால் அதற்கான இழப்பீடை அந்த நிறுவனம் வழங்கவில்லை என அந்த விவசாயி போலீசில் கூறியுள்ளார்’’ என்றார்.

மேலும் செய்திகள்