புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு நூதன தண்டனை

ஊரடங்கு நேரத்தில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுக்கு நூதன தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2021-05-31 11:49 GMT
ஊரடங்கு
புதுவை மாநிலத்தில் கொரோனா பரவல் 2-வது அலை தீவிரமாக உள்ளது. இதனை தடுக்க அரசும், சுகாதாரத்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே கொரோனா பரவலை பெரிதுபடுத்தாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நகர் மற்றும் கிராம புறங்களில் கிரிக்கெட், கைப்பந்து உள்ளிட்டவற்றை 
விளையாடி வருவதை காண முடிகிறது.

கொரோனா தடுப்பு பணி
இந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வம்பாகீரப்பாளையம் பாண்டி மெரினா கடற்கரையில் வாலிபர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டவுடன் அவர்கள் நாலாபுறமும் சிதறிஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்றனர். இதில் 2 வாலிபர்கள் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். மேலும் அங்கிருந்த விளையாட்டு உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரிடம் சிக்கிய 2 வாலிபர்களையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு ஊரடங்கு காலத்தில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும் என போலீசார் எச்சரித்தனர். மேலும் அவர்களை போலீசாருடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோஜ் உத்தரவிட்டார். இதற்காக அந்த 2 வாலிபர்களுக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்படுகிறது. அதன் முடிவுகள் வெளியான பிறகு அவர்கள் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்