திட்டக்குடி பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு

திட்டக்குடி பகுதியில் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்களை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு செய்தார்.

Update: 2021-05-31 16:45 GMT
திட்டக்குடி, 


திட்டக்குடி அருகே உள்ள அருகேரி, மருவத்தூர், தொளார், வையங்குடி, ஆதமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 370 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன வசதி மூலம் நெல் சாகுபடி செய்தனர்.

நெல் அறுவடைக்கு தயாராகி வந்த நிலையில், சமீபத்தில் பெய்த கனமழையால் நெல் வயல்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பயிர்கள் அனைத்தும் மழைநீரில் மூழ்கியும், சாய்ந்தும் போனதால் அறுவடை பணி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். 

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில் அமைச்சர் சி.வெ.கணேசன், மழையில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெல் வயல்களை  நேரில் சென்று ஆய்வு செய்தார்.  அப்போது அங்கிருந்த விவசாயிகள், பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் நெல்மணிகள் முளைக்க தொடங்கி விட்டது என்று கவலையுடன் தெரிவித்தனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாயிகளிடம் உறுதியளித்தார்.

அப்போது தாசில்தார் தமிழ்ச்செல்வி, வேளாண் இணை இயக்குனர் பாலசுப்ரமணியம், மண்டல துணை தாசில்தார் சிவராமன், நல்லூர் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன், துணை வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் பட்டூர்அமிர்தலிங்கம், நகர செயலாளர் பரமகுரு, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், தகவல் தொழில் நுட்ப அணி தொகுதி அமைப்பாளர் விக்னேஷ், விவசாய சங்க தலைவர் மருதாசலம், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி, வருவாய்த்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனா்.

திட்டக்குடி மருத்துவமனை

முன்னதாக திட்டக்குடி அரசு மருத்துவமனையை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனைக்கு தலைமை மருத்துவர் செல்வேந்திரனிடம் 10 ஆக்சிஜன் செறிவூட்டிகளை அவர் வழங்கினார். 

மேலும் செய்திகள்