பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க இந்து முன்னணி கோரிக்கை

பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்துக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

Update: 2021-05-31 16:52 GMT
குலசேகரன்பட்டினம், ஜூன்:
உடன்குடி அருகே பரமன்குறிச்சி மின்நிலையத்தில் இருந்து பரமன்குறிச்சி, மாநாடு தண்டுபத்து, வெள்ளாளன்விளை, குதிரைமொழி, நயினார்பத்து, சீர்காட்சி, மேலதிருச்செந்தூர், நாலுமூலைக்கிணறு என 8 கிராம பஞ்சாயத்து பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டுவருகிறது. சுமார் 20 கி.மீ சுற்றளவு கொண்ட இந்த பகுதிகளுக்கு சென்று மின் பழுது பார்த்தல் மற்றும் பல்வேறு பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லை. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். எனவே கிராமப்புறங்களுக்கு சென்று மின்சாரம் பழுது பார்த்தல் போன்ற பணிகளுக்கு கூடுதல் வயர்மேன் பணி அமர்த்தப்பட வேண்டும் என இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தமிழக முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இந்நிலையில் பரமன்குறிச்சி அலுவலகத்திற்கு 5 கேங்மேன் பணி அமர்த்தப்பட்டனர். தற்போது கொரோனா காலத்தை பயன்படுத்தி அந்த 5 பேரும் திருச்செந்தூர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் பணியாற்றி வருகின்றனர். இதனால் பரமன்குறிச்சியில் உள்ள தோட்டங்கள் மற்றும் வீடுகளில் மின் பழுது ஏற்பட்டால் சரி செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லை. இதனால் தோட்டங்களில் மின்சார வசதி இல்லாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பரமன்குறிச்சி மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பரமன்குறிச்சி மின்சார அலுவலகத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என இந்து துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் மின்சாரத்துறை அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தார். இதுபோன்று பரமன்குறிச்சி ஊருக்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜை நேரில் சந்தித்தும் அவர் மனு கொடுத்தார்.

மேலும் செய்திகள்