3 பட்டு சேலை விற்பனை கடைகளுக்கு சீல் வைப்பு

விதியை மீறி இயங்கிய 3 பட்டு சேலை விற்பனை கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

Update: 2021-05-31 17:09 GMT
வளவனூர்,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வில்லா முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதோடு மருந்து கடைகள், பால் விற்பனை நிலையங்கள், ஓட்டல்களை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விழுப்புரம் அருகே கண்டமங்கலம், சிறுவந்தாடு பகுதிகளில் ஊரடங்கு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்று நேற்று தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சிறுவந்தாடு கடை வீதியில் விதிகளை மீறி 3 பட்டு சேலை விற்பனை கடைகள் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த 3 கடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததோடு அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பட்டுசேலைகளை வாங்க 3 கார்களில் வந்தவர்களுக்கு தலா ரூ.1,500 வீதம் 3 பேருக்கு ரூ.4,500 அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்