கிராவல் மண் கடத்திய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடிப்பு

தோகைமலை அருகே கிராவல் மண் கடத்திய வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

Update: 2021-05-31 17:38 GMT
தோகைமலை
வாகனங்கள் சிறைபிடிப்பு
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள போத்துராவுதன்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு புறம்போக்கு, ஆற்றுவாரி மற்றும் பட்டா நிலங்களிலும் தொடர்ந்து இரவு, பகலாக சிலர் மாட்டுவண்டி, டிப்பர் லாரி மூலம் கிராவல் மண்ணை கடத்தி வந்துள்ளனர். இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் வருவாய்த்துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.  இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சிலர் கிராவல் மண்ணை கடத்துவதாக பொதுமக்களுக்கு ரகசிய தகவல் வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நீண்ட நேரம் ஆகியும் யாரும் வரவில்லை. இதையடுத்து மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்து விட்டு, கிராவல் மண்ணை கடத்திய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.
வாகனங்கள் பறிமுதல்
இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சப்பட்டி வருவாய் அதிகாரி ரமேஷ், போத்துராவுத்தன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து கிராவல் மண் கடத்தலில் ஈடுபட்ட டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து தோகைமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
இதுதொடர்பாக வருவாய் அதிகாரி ரமேஷ் தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லாரி டிரைவர் மேல பஞ்சப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி (வயது 41), பொக்லைன் இயக்குனர்  கணக்கப்பிள்ளை கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (29) ஆகிய 2 பேர் மீதும் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்