கச்சிராயப்பாளையம் அருகே நெல் அறுவடை எந்திர உரிமையாளர் மர்மசாவு

கச்சிராயப்பாளையம் அருகே நெல் அறுவடை எந்திர உரிமையாளர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-05-31 17:44 GMT
கச்சிராயப்பாளையம்

தொழிலில் நஷ்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தாமரைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்(வயது 51). நெல் அறுவடை எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். 
இந்த நிலையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடன் தொல்லை அதிகமானதை அடுத்து செல்வம் தனது நெல் அறுவடை எந்திரங்களை விற்பதற்காக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவுக்கு சென்றார். 

மர்ம சாவு

பின்னர் தனக்கு தெரிந்த நண்பர்களிடம் பணம் வாங்கி கடனை அடைக்கலாம் என்று முடிவு செய்த செல்வம் கடந்த 7 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு கிராமத்துக்கு வந்தார். அங்கு அருண் என்பவர் வீ்ட்டில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீ்ட்டின் அறையில் செல்வம் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் லேசான காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. 

மகன் கதறல்

இதுபற்றிய தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 
பின்னர் செல்வம் இறந்தது குறித்து அவரது மகன் சுதாகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தேனியில் இருந்து புறப்பட்டு தாவடிப்பட்டுக்கு வந்தார். தனது தந்தையின் உடலை பார்த்து அவர் கதறி அழுதபடி போலீசாருக்கு அடையாளம் காண்பித்தார். இதையடுத்து செல்வத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சாவில் சந்தேகம்

தனது தந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுதாகரன் கொடு்த்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவுசெய்து செல்வத்தின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்