கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை அமைச்சர் பேட்டி

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கூறினார்.

Update: 2021-05-31 18:09 GMT
வேலாயுதம்பாளையம்
அமைச்சர் பேட்டி 
கரூர் மாவட்ட ரோட்டரி சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்ட ரூ.18 லட்சம் மதிப்பிலான 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை நேற்று வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் வைத்து மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வழங்கினார். 
பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டிளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் காகித ஆலையில் கொரோனா சிறப்பு மையத்தை திறந்து வைத்தார். இந்த மையம் 152 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடனும், 48 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி இல்லாமலும் அமைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு நோயாளிகளுக்கு சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக 6 டாக்டர்கள், 1 செவிலிய கண்காணிப்பாளர், 10 செவிலியர்கள், 4 சுகாதாரப் பணியாளர்கள், 4 தூய்மை பணியாளர்கள், 1 மருந்தாளுனர், 3 தரவு உள்ளீட்டாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம்
கூடுதலாக 7,000 லிட்டர் ஆக்சிஜன் கொள்ளளவுள்ள 30 உருளைகள் தயார் நிலையில் பயன்பாட்டிற்காக உள்ளன. குடிநீர், கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜெனரேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை 
கரூர் மாவட்டத்தில் 292 ஆக இருந்த ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் தற்போது 852 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையினை 1,300 ஆக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 5 தினங்களுக்குள் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஞானக்கண்பிரேம் நிவாஸ், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுனர் கோபாலகிருஷ்ணன், துணை ஆளுனர்கள் அர்ஜூனா, சுந்தர்ராஜன் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்