கோவையில் மீண்டும் அதிகரிக்கும் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா

கோவையில் மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என கோரிக்கை எழுந்துள் ளது.

Update: 2021-05-31 18:10 GMT
கோவை

கோவையில் மீண்டும் வாகன போக்குவரத்து அதிகரிப்பால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என கோரிக்கை எழுந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் முதலிடம்

தமிழக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் கோவை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. ஒரே நாளில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 47 பேர் உயிரிழந்தனர். குறிப்பாக கோவை மாநகரில் தினமும் 1,500 பேர் முதல் 1,800 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். 

இதனை கட்டுப்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப் பட்டதும் கோவையில் ஒரு சில நாட்கள் மட்டுமே சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து காணப்பட்டது. 

மேலும் போலீசாரும் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதால் தேவை இல்லாமல் யாரும் வெளியே செல்லவில்லை. 

உலா வரும் இளைஞர்கள்

இந்த நிலையில் ஊரடங்கில் வீட்டில் இருக்க முடியாத இளைஞர்கள் பலர் தங்களது விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை எடுத்துக் கொண்டு சாலைகளில் உலா வருகின்றனர். மேலும் சிலர் கார்களில் வலம் வருகின்றனர்.

அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கேட்கும்போது, உறவினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது மருந்து கொண்டு செல்கிறேன் அல்லது உணவு கொண்டு செல்கிறேன் என்று ஏதாவது ஒரு காரணத்தை கூறி தப்பித்து செல்கின்றனர்.

போக்குவரத்து நெரிசல் 

பொறுப்பற்று சாலைகளில் திரியும் இந்த இளைஞர்களின் கூட்டத்தால் கோவை மாநகரில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. 

இது ஒருபுறம் இருக்க கோவை- அவினாசி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, என்.எஸ்.ஆர். ரோடு, ஆத்துப்பாலம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது. 

இதன் காரணமாக சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதை பார்க்கும்போது தற்போது தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று நினைக்கக்கூடிய நிலையும் ஏற்பட்டு இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- 

23 இடங்களில் கண்காணிப்பு 

கோவை மாநகரில் காய்கறிகள் விற்பனை செய்ய 2 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 

இதுதவிர மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது.

மாநகரில் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த 23 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி தேவையின்றி சுற்றுபவர்களுக்கு கொரோனா உறுதி மொழி எடுக்க வைக்கின்றோம். 

978 பேர் மீது வழக்கு 

கோவை மாநகரில்  தேவையின்றி வலம் வந்த 203 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதுபோன்று 978 பேர் மீது ஊரடங்கை மீறியதாக தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே இளைஞர்கள் தேவை இல்லாமல் வெளியே செல்வதை பெற்றோரும் தடுத்து, கொரோனா பரவலை தடுக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

மேலும் செய்திகள்