ஊரடங்கால் பருத்தி விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

ஊரடங்கால் பருத்தி விற்பனை செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்

Update: 2021-05-31 18:17 GMT
முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் அதை சுற்றியுள்ள பகுதிகளான காக்கூர், ராமலிங்கபுரம், குமாரகுறிச்சி, கடம்பேடை, பூசேரி, தேரிருவேலி, ஆதன் கொத்தங்குடி, கருமல் வளநாடு, விளங்குளத்தூர், வெங்கலகுறிச்சி, வெண்ணீர் வாய்க்கால், நல்லூர், காத்தன்குளம், பேரையூர், இலந்தைகுளம், கீழ காஞ்சரங்குளம், சித்திரங்குடி, தோப்படாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சாகுபடி செய்யப்பட்ட பருத்தி செடிகளில் நல்ல மகசூல் கிடைத்தபோதும் வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்வதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 
கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் இருந்தபோதிலும் இந்தாண்டு தரத்திற்கேற்ப 4400, 4500, 4600 ரூபாய் ஆகிய குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறியபோது, இந்த ஆண்டு பருத்தி செடிகள் நல்ல மகசூல் இருந்தபோதிலும் முழு ஊரடங்கு காரணமாக செடி இருந்து பறிக்கப்படும் பஞ்சுகளை உடனுக்குடன் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பஞ்சுகளின் எடை குறைந்து இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறினார். எனவே விவசாயிகளின் நலன் கருதி பருத்தியை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்