கோவையில் மையங்கள் முன் கொரோனா தடுப்பூசிக்காக கால்கடுக்க காத்திருந்த பொதுமக்கள்

கோவையில் தடுப்பூசிக்காக மையங்கள் முன்பு பொதுமக்கள் கால் கடுக்க காத்திருந்தனர். ஆனால் குறைவான நபர்களுக்கு டோக்கன் வழங்கியதால் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-05-31 18:20 GMT
கோவை

கோவையில் தடுப்பூசிக்காக மையங்கள் முன்பு பொதுமக்கள் கால் கடுக்க காத்திருந்தனர். ஆனால் குறைவான நபர்களுக்கு டோக்கன் வழங்கியதால் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

கொரோனா தடுப்பூசி 

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 மாநகரம் மற்றும் ஊரக பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களில் காலை 7 மணி முதல் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். 

அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் தடுப்பூசி போடப்படுகிறது. இருப்பினும் தடுப்பூசியின் எண்ணிக்கையை விட அதிகளவு பொதுமக்கள் வருவதால் அவர்கள் மையத்தின் முன் காத்து கிடக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. 

டோக்கன் வழங்கப்பட்டது

இந்த நிலையில்  கோவேக்சின் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மாநகரில் உள்ள 32 நகர்ப்புற சுகாதார மையங்களில் தலா 130 தடுப்பூசிகள் போடப்படும் என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. 

இதனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த மையங்கள் முன் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர். 

குறிப்பாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் காலை முதல் பொதுமக்கள் காத்து கிடந்தனர். 

130 தடுப்பூசி மட்டுமே போட முடியும் என்பதால் முதலில் வந்த 130 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. 

ஊழியர்களிடம் வாக்குவாதம் 

இதனால் கால் கடுக்க காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்ததுடன் அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து அங்கு இருந்த ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு மாநில அரசு வழங்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி 75 ஆயிரம் பேருக்கு போடப்பட்டு உள்ளது. தற்போது இருப்பு இல்லை. 

தடுப்பூசி பெற நடவடிக்கை 

மத்திய அரசு வழங்கும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி 4,500 மட்டுமே இருந்தது. கடலூரில் இருந்து 6 ஆயிரம் தடுப்பூசி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக கோவையில் இருந்து வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்