தென்காசியில் நடமாடும் காவல் தீர்வு வாகனம் தொடக்கம்

தென்காசியில் நடமாடும் காவல் தீர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.

Update: 2021-05-31 21:34 GMT
தென்காசி:
தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் புதிய முயற்சியாக ‘நடமாடும் காவல் தீர்வு மையம்- மக்களை நோக்கி தென்காசி மாவட்ட காவல்துறை’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய நான்கு போலீஸ் உட்கோட்டங்களுக்கும் 8 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

தற்போது ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை இருப்பதால், தங்களது குறைகளை கூறுவதற்கு வசதியாக இந்த வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சூப்பிரண்டு சுகுணா சிங் நேற்று இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடமாடும் காவல் தீர்வு மையம் மூலமாக காவல்துறையினர் உட்கோட்டத்தில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு உள்ள குறைகளை கேட்டு அதற்கு உடனடியாக அந்த இடத்திலேயே வைத்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பொது முடக்க காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே கிடைக்க உரிய நடவடிக்கைகளும் நடமாடும் காவல் தீர்வு மையம் மூலம் எடுக்கப்படும். 

மேலும் கொரோனா தொற்றின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வார்கள். இதுதவிர அத்தியாவசிய தேவைகள் தேவைப்படும் பெண்களுக்கு உதவி செய்வதற்காக நடமாடும் வாகனத்தில் பெண் காவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் உணவில்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் காவல்துறையினரால் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்