கச்சிராயப்பாளையம் அருகே கடந்த ஒரு மாதமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த சாராய வியாபாரி கொரோனா பரிசோதனையின்போது சிக்கினார்

கச்சிராயப்பாளையம் அருகே கடந்த ஒரு மாதமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு தலைமறைவாக இருந்து வந்த சாராய வியாபாரி கொரோனா பரிசோதனையின்போது சிக்கினார்.

Update: 2021-06-01 00:28 GMT
கச்சிராயப்பாளையம்

சாராய வியாபாரி

கச்சிராயப்பாளையம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் அவரை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் போலீசாருக்கு உத்தரவிட்டார். 
இதையடுத்து கச்சிராயப்பாளையம் போலீசார் கலையரசனை கைது செய்வதற்காக அவரது வீட்டுக்கு சென்றபோது அவர்  தலைமறை           வாகிவிட்டார். இருப்பினும் கடந்த ஒரு மாதகாலமாக கலையரசனை போலீசார் தேடி வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் அவரை பிடிப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது. 

கொரோனா பரிசோதனை

இந்த நிலையில் கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையம் பகுதியில் நேற்று ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனைக்காக முககவசத்தை அகற்றியபோது அவர் போலீசாரால் தேடப்பட்ட கலையரசன் என்பது தெரியவந்தது. 

கைது

இதனால் சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது எடுத்தவாய்நத்தம் பேரூராட்சி குட்டை அருகில் 55 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கலையரசனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். கடந்த ஒருமாத காலமாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தலைமறைவாக இருந்த வந்த சாராய வியாபாரி கொரோனா பரிசோதனையின் போது சிக்கியதால் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

மேலும் செய்திகள்