கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கான உலகளாவிய டெண்டர் கைவிடப்பட்டது துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பேட்டி

தனியார் நிறுவனங்கள் ஆவணங்களை வழங்காததால், கொரோனா தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய டெண்டர் கைவிடப்பட்டதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.

Update: 2021-06-01 02:06 GMT
பெங்களூரு, 

கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோக பணியை பெங்களூருவில் நேற்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

“கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலக அளவிலான டெண்டருக்கு கடந்த மே மாதம் 15-ந் தேதி அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் மும்பை, பெங்களூருவை சேர்ந்த 2 நிறுவனங்கள் கலந்து கொண்டு விண்ணப்பித்தன. கர்நாடகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வினியோகம் செய்வதாக உறுதியளித்தன.

ஆனால் நிதி, தடுப்பூசி வினியோக உறுதி உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக விவாதிக்க 2 முறை டிஜிட்டல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. மேலும், ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த ஆவணங்களையும் அந்த நிறுவனங்கள் வழங்கவில்லை.

இதையடுத்து தடுப்பூசி கொள்முதலுக்கான உலக அளவிலான டெண்டர் கைவிடப்பட்டுள்ளது. அதனால் திறந்த மார்க்கெட்டில் நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. உலகின் எந்த நிறுவனமாக இருந்தாலும் சரி, தடுப்பூசிகளை வழங்க முன்வந்தால் அதை கொள்முதல் செய்ய அரசு தயாராக உள்ளது.

இந்த தகவல் உலக அளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடுப்பூசி கிடைக்கும் என்று அரசு அமைதியாக உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகளை செய்ய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மாநிலத்தில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அரசு இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஆனால் சிலவற்றுக்கு தளர்வு அளிக்க வேண்டியது அவசியம். இதுகுறித்து முடிவு எடுக்க இன்னும் காலஅவகாசம் உள்ளது. ஊரடங்கு முடிவடைய இன்னும் ஒரு வாரம் உள்ளது. புள்ளி விவரங்களை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுக்கப்படும்.

மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளையும் பெற வேண்டியுள்ளது. மனித உயிர்களை காப்பதுடன் வாழ்க்கையும் நடைபெற வேண்டும். அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் வழங்க வேண்டியது அவசியம். திரைத்துறையில் 18 வயதுக்கு மேற்பட்ட 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும். நிதி நெருக்கடியில் உள்ள திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதி உதவியுடன் உணவு தானியங்கள் வழங்கவும் அரசு தயாராக உள்ளது.

வறுமையில் வாடும் திரை தொழிலாளர்களுக்கு வீடு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. தகுதியுள்ள தொழிலாளர்கள் விண்ணப்பிக்கலாம். நமது கலை, கலாசாரத்தை காப்பதில் கலைஞர்களின் பங்கு முக்கியமானது. அதனால் கலைஞர்கள் நமது கலாசாரத்தின் தூதர்கள். அதனால் கலைஞர்கள் கஷ்டத்தில் சிக்கி தவிப்பதை அரசு விரும்பவில்லை.” இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

மேலும் செய்திகள்