முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை; அண்ணன்-தம்பிகள் உள்பட 5 பேர் கைது

முன்விரோத தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அண்ணன்-தம்பிகள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-01 06:56 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பாரதி நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 26). இவர், நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழைய பெருங்களத்தூர் சுண்ணாம்பு கால்வாய் ஜோதி நகர் 3-வது தெரு சந்திப்பு அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மர்மநபர்கள் 7 பேர், அவரை வழிமறித்து சரமாரியாக தாக்கியதுடன், கத்தியால் அவரது தலையில் வெட்டினர். இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், விக்னேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடந்த 2019-ம் ஆண்டு சிவன் கோவில் தெரு அருகில் கொலையான விக்னேசின் நண்பர்களான சரத்குமார் மற்றும் சந்துரு ஆகிய இருவரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும், பீர்க்கன்காரணை சீனிவாசா நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான மணிமாறன் (28), அவருடைய தம்பிகளான மணிகண்டன் (24), சூர்யா (23) ஆகியோருக்கும் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது.

அப்போது சரத்குமார், மணிகண்டன் வைத்திருந்த கத்தியை பறித்து அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினார். இது குறித்து பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரத்குமார் மற்றும் சந்துரு இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பிறகு 2020-ம் ஆண்டு பழைய பெருங்களத்தூர் காமராஜர் சாலையில் உள்ள டீ கடையில் சூர்யா நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான தாமு, திருப்பதி ஆகியோர் சூர்யாவை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், ‘உன்னை கொலை செய்யாமல் விடமாட்டோம்’ என மிரட்டியதால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.

அப்போது தாமு, தான் வைத்திருந்த கத்தியால் சூர்யாவை குத்த முயன்றார். இதை தடுத்தபோது சூர்யாவின் கையில் பலத்த வெட்டு விழுந்தது. இதுபற்றியும் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர். தாமு மற்றும் விக்னேஷ் இருவரும் கோர்ட்டில் முன்ஜாமின் பெற்று தப்பினர்.

இதனால் மணிமாறன் மற்றும் விக்னேஷ் தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில்தான் நேற்று முன்தினம் இரவு மணிமாறன் மற்றும் அவருடைய தம்பிகளான மணிகண்டன், சூர்யா உள்பட 7 பேர் விக்னேசை வழிமறித்து கத்தியால் வெட்டிக்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அண்ணன்-தம்பிகளான மணிமாறன், மணிகண்டன் மற்றும் சூர்யா உள்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்