புதுச்சேரியில் புதிதாக 627 பேருக்கு தொற்று; கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 627 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-06-01 10:36 GMT
குறைய தொடங்கிய கொரோனா
புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் சரிந்துள்ளது.புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 7 ஆயிரம் பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 627 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 1,629 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,536 ஆக உயர்ந்துள்ளது.

30 வயது வாலிபர்
புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பாரதிமில் திட்டு பகுதியை சேர்ந்த 37 வயது ஆண், பெரிய காலாப்பட்டை சேர்ந்த 70 வயது முதியவர், கிருஷ்ணா நகரை சேர்ந்த 89 வயது முதியவர், கதிர்காமத்தை சேர்ந்த 72 வயது மூதாட்டி ஆகியோரும், தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் அரியாங்குப்பம் பாரதி நகரை சேர்ந்த 77 வயது மூதாட்டி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த 65 வயது மூதாட்டி, ஆகியோரும், கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதலியார்பேட்டையை சேர்ந்த 71 வயது மூதாட்டி, உழவர்கரையை சேர்ந்த 44 வயது ஆண், மணவெளி சுப்பையா நகரை சேர்ந்த 57 வயது ஆண், ஜெயம் நகரை சேர்ந்த 43 வயது ஆண், தட்டாஞ்சாவடியை சேர்ந்த 52 வயது ஆண் ஆகியோரும் பலியானார்கள்.ஜிப்மர் ஆஸ்பத்திரியில் மோகன் நகரை சேர்ந்த 69 வயது மூதாட்டி, வி.வி.பி. நகரை சேர்ந்த 53 வயது ஆண், ஏனாமில் 30 வயது வாலிபர், 60 வயது மூதாட்டி, காரைக்காலில் காஜியார் வீதியை சேர்ந்த 75 வயது முதியவர், 67 வயது மூதாட்டி, திருநள்ளாறை சேர்ந்த 75 வயது முதியவர் ஆகியோர் பலியாகி உள்ளனர்.

தடுப்பூசி
மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 1,541 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 9 ஆயிரத்து 206 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 91 ஆயிரத்து 770 பேர் குணமடைந்துள்ளனர். புதுவையில் உயிரிழப்பு 1.47 சதவீதமாகவும், குணமடைவது 87.86 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் சுகாதார பணியாளர்கள் 11 பேரும், முன்கள பணியாளர்கள் 24 பேரும், பொதுமக்கள் 2 ஆயிரத்து 124 பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 2 லட்சத்து 62 ஆயிரத்து 939 பேருக்கு தடுப்பூசி 
போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்