சென்னையில் தலைமறைவாக இருந்த தம்பதி உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில் வங்காளதேச நாட்டு இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் சென்னையில் தலைமறைவாக இருந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-01 18:59 GMT
பெங்களூரு:

பெங்களூருவில் வங்காளதேச நாட்டு இளம்பெண் கற்பழிக்கப்பட்ட வழக்கில் சென்னையில் தலைமறைவாக இருந்த தம்பதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் கூட்டாக கற்பழிப்பு

பெங்களூரு ராமமூர்த்திநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அவர், வங்காளதேச நாட்டை சேர்ந்தவர் ஆவார். பெங்களூருவில் அவர் விபசார தொழில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை 4 பேர் கூட்டாக கற்பழித்ததுடன், அவரது மர்ம உறுப்பில் கொடூரமாக தாக்குதல் நடத்தி இருந்தார்கள். இதனை வீடியோ எடுத்தும் அவர்கள் வெளியிட்டு இருந்தார்கள். 

இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்திநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய தம்பதி உள்பட 3 பேர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. 

அவர்கள் 3 பேரும் சென்னையில் தலைமறைவாக இருப்பது பற்றி ராமமூர்த்திநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 3 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

3 பேர் கைது

இந்த நிலையில், தனிப்படை போலீசார் சென்னைக்கு விரைந்து சென்றார்கள். அங்கு தலைமறைவாக இருந்த ரப்ஜான், அவரது மனைவி சானியா மற்றும் சபாஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இதற்கிடையில், கற்பழிப்புக்கு உள்ளான இளம்பெண், 164 சட்டப்பிரிவின் கீழ் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, நீதிபதி முன்னிலையில் இளம்பெண் வாக்குமூலம் அளிக்க அனுமதி கேட்டு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். நீதிபதி அனுமதி அளித்ததும், இளம்பெண் வாக்குமூலம் அளிக்க தயாராக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்