திருவாரூர் நகரில், இதுவரை 1,200 வீடுகளில் காய்ச்சல்-ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை நகராட்சி ஆணையர் தகவல்

திருவாரூர் நகரில் இதுவரை 1,200 வீடுகளில் காய்ச்சல்- ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை நடைபெற்றுள்ளது என நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறினார்.

Update: 2021-06-03 18:48 GMT
திருவாரூர்,

கொரோனா நோய் தீவிரத்தை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொேரானாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் திருவாரூரில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி உரிய பரிசோதனை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல்-ஆக்சிஜன் பரிசோதனை

அதன்படி மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள் வழிகாட்டுதலின்படி திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் தலைமையில் துப்பரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் நகரில் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தி வருகின்றனர். அதன்படி வீடு, வீடாக சென்று உடல் வெப்ப நிலை, ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறுகையில்,

திருவாரூர் நகரில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் அதிக பாதிப்புள்ள பகுதிகளில் நகராட்சி பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பாதிப்புள்ளவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உரிய ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 1,200 வீடுகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கபசுரகுடிநீர் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கொரேனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். ஊரடங்கில் தேவையான அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று வழங்கிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்த்து அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்