கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலி

கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 2 பேர் பலியானார்கள்.

Update: 2021-06-03 19:06 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த இளவரசு (வயது 54) என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோயின் அளவும் அதிகரித்தது. கண்களில் வீக்கம் காணப்பட்டது.
இதனால் அவரை பரிசோதனை செய்தபோது அவருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று அவர்  பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கள்ளக்குறிச்சியில் ஒருவர் பலி

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடிமை பொருள் தாசில்தார் வெங்கடேசன் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை தொடர்ந்து 7 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் சங்கராபுரத்தை சேர்ந்த 53 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 6 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்