அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லை அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-06-03 21:46 GMT
பேட்டை:
நெல்லை டவுனை அடுத்த பேட்டை மயிலப்புரத்தை சேர்ந்தவர் தங்கசாமி மகன் கருத்தப்பாண்டி என்ற கணேச பாண்டியன் (வயது 54). திருப்பணிகரிசல்குளம் அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி செயலாளரான இவர் அப்பகுதியில் டாஸ்மாக் பார், செங்கல் சூளை நடத்தி வந்தார். கடந்த மாதம் 12-ந்தேதி காலை இவர் பார் பகுதியில் இருந்தபோது, அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது.

இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கருத்தப்பாண்டியின் உறவினரான பேட்டை எம்.ஜி.ஆா். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவரது ஆடு காணாமல் போனது தொடர்பாக புகார் அளிப்பதற்க்கு கருத்தப்பாண்டி ஆதரவாக செயல்பட்டதாகவும், புகாரை வாபஸ் பெற மறுத்ததால் ஆத்திரமடைந்த பேட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த சமுத்திர பாண்டி மகன் பாஸ்கர் (28) தனது நண்பர்களான ரகுமான்பேட்டையை சேர்ந்த முஸ்தபா மகன் அப்துல்காதர் (30), முகம்மது மகன் மைதீன் சேக் (25), பேட்டை சத்யாநகரை சேர்ந்த விஜி (26) ஆகியோருடன் சேர்ந்து கருத்தப்பாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவர்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட கலெக்டர் விஷ்ணு குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

மேலும் செய்திகள்