உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு இளம்பெண்ணை கொன்ற கள்ளக்காதலன்

உளுந்தூர்பேட்டையில் வேறொருவருடன் பேசிவந்ததால் ஆத்திரம் அடைந்து இளம்பெண்ணின் கழுத்தை நெறித்து கொலை செய்த, அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-05 01:26 GMT
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் எழில்செல்வி(வயது 22). இவரும் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நைனாகுப்பம் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. 
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை தாலுகா ஒலையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவருடன் எழில்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறிய எழில்செல்வி உளுந்தூர்பேட்டையில் வாடகை வீட்டில் அய்யப்பனுடன் வசித்து வந்தார். 

நடத்தையில் சந்தேகம்

இதற்கிடையே எழில்செல்வியின் நடவடிக்கைகளில் அய்யப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 
நேற்று காலையிலும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 
அப்போது ஆத்திரம் அடைந்த அய்யப்பன், எழில்செல்வியின் கழுத்தை நெரித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை, அய்யப்பன் தனது உறவினர்கள் சிலர் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். 
அங்கு தனது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் டாக்டர்களிடம் அய்யப்பன் கூறினார். இதையடுத்து எழில்செல்வியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

போலீசார் விசாரணை

இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த உளுந்தூர்பேட்டை போலீசார், அய்யப்பனிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், எழில்செல்வியை கொலை செய்ததை அய்யப்பன் ஒப்புக்கொண்டார்.
வேறு ஒருவருடன் பேசிவந்தால் ஆத்திரம்
இது தொடர்பாக அவர் போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில் எழில் செல்வியின் நடத்தையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவருடன் வாக்குவாதம் செய்ததாகவும், தனக்கு துரோகம் செய்துவிட்டு வேறு ஒருவருடன் செல்போனில் பேசி வந்தது தெரியவந்ததால் ஆத்திரம் அடைந்த நான் எழில் செல்வியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் கூறினார். 
அதைத்தொடர்ந்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்