கொரோனா குறைந்து வரும் அளவின் அடிப்படையில் நடவடிக்கை; மாவட்டங்களை 5 வகையாக பிரித்து மராட்டியத்தில் புதிய தளர்வுகள்; மும்பையில் பூங்கா, சலூன் திறக்க அனுமதி

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதிய தளர்வுகளை அறிவிக்க அரசு முடிவு செய்தது.

Update: 2021-06-06 11:29 GMT
5 வகையாக பிரிப்பு
புதிய தளர்வுகள் தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையில் சமீபத்தில் நடந்த பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் ஆலோசனை நடத்தி கொள்கையளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது புதிய தளர்வுள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஒரு வார கால கொரோனா பாதிப்பு சதவீதம், நிரம்பிய ஆக்சிஜன் படுக்கைகள் சதவீதம் ஆகியவற்றை 
அளவுகோலாக கொண்டு மாவட்டங்கள், மாநகர பகுதிகள் 5 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் செய்யப்பட்டு உள்ளன.

முதல் பிரிவில் முற்றிலும் தளர்வு
இதில் கொரோனா பாதிப்பு சதவீதம் 5-க்கு கீழும், 25 சதவீதம் வரை ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய நகரங்கள் முதல் பிரிவில் இடம்பிடித்து உள்ளன. இந்த நகரங்களில் முற்றிலுமாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இங்கு வணிக வளாகம், தியேட்டர், ஓட்டல்கள், பொது இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தனியார், அரசு நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சலூன்கள் திறக்கவும், மின்சார ரெயில்களை வழக்கம்போல இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் அகமதுநகர், துலே, கட்சிரோலி, ஜல்காவ், ஜல்னா, லாத்தூர், நான்தெட், யவத்மால் உள்ளிட்ட 18 மாவட்டங்கள் இடம்பெற்று உள்ளன.கொரோனா பாதிப்பு 5 சதவீதமும், ஆக்சிஜன் படுக்கைகள் 25 முதல் 40 சதவீதம் நிரம்பிய மாவட்டங்கள், மாநகராட்சிகள் 2-வது பிரிவில் இடம்பிடித்து உள்ளன. இந்த பகுதிகளில் கடைகள் அனைத்தும் வழக்கம்போல திறந்து இருக்கும். ஆனால் தியேட்டர், வணிகவளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. ஓட்டல்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.

மும்பை, நவிமும்பை, புனே
கொரோனா பாதிப்பு சதவீதம் 5 முதல் 10 வரையும், ஆக்சிஜன் படுக்கைகள் 40 சதவீதத்திற்கு மேல் நிரம்பிய மாநகர, மாவட்ட பகுதிகள் 3-வது பிரிவில் இடம்பிடித்துள்ளன. மும்பை, தானே, கல்யாண் - டோம்பிவிலி, நவிமும்பை, புனே ஆகிய முக்கிய நகரங்கள் மற்றும் நாசிக் மாவட்டம் இந்த பட்டியலில் தான் இடம்பிடித்து உள்ளன. இங்கு அத்தியாவசிய கடைகள் மாலை 4 மணி வரை திறந்து வைக்கலாம். மற்ற கடைகளும் வார இறுதிநாட்கள் தவிர திங்கள் முதல் வெள்ளிவரை மாலை 4 மணி வரை செயல்படலாம். வணிகவளாகங்கள், தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சலூன், அழகுநிலையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் (ஜிம்) ஏ.சி. பயன்படுத்தாமல் 4 மணி வரை செயல்படலாம்.

பூங்கா, சலூன் திறப்பு
மேலும் 3-வது பிரிவு பகுதிகளில் வார நாட்களில் மட்டும் உணவகங்களை மாலை 4 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே உட்கார்ந்து சாப்பிட முடியும். பார்சல், டெலிவரிக்கு எந்த தடையும் இல்லை. பொது மக்கள் உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்ய வசதியாக பூங்கா, விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்கள் தினமும் காலை 5 மணி முதல் 9 மணி வரை திறந்து இருக்கும்.மின்சார ரெயில்களில் அத்தியாவசிய, மருத்துவ பணியாளர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். பொது மக்களுக்கு அனுமதி இல்லை. தனியார் அலுவலகங்கள் மாலை 4 மணிவரை செயல்படலாம். மாலை 5 மணிக்கு பிறகு வெளிநடமாட்டம் இல்லாத வகையில் சினிமா, டி.வி. படப்பிடிப்புகளை நடத்தி கொள்ளலாம். திருமண நிகழ்ச்சிகளில் 
அதிகபட்சம் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.50 சதவீத நபர்களுடன் சமூக, அரசியல் கூட்டங்களை நடத்தலாம். 3-வது பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த பகுதிகளில் மாலை 5 மணி வரை 144 தடை உத்தரவும், அதன்பிறகு ஊரடங்கும் அமலில் இருக்கும்.

4, 5-வது பிரிவில்...
கொரோனா பாதிப்பு சதவீதம் 10 முதல் 20 வரையிலும், 60 சதவீதத்திற்கு மேல் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பிய பகுதிகள் 4-வது பிரிவில் வருகின்றன. இங்கு அத்தியாவசிய கடைகள் மட்டும் மாலை 4 மணி வரை திறந்து இருக்கும். ஓட்டல்களில் பார்சல், டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பால்கர், புனே ஊரகப்பகுதி, ராய்காட், சத்தாரா, சிந்துதுர்க், பீட் உள்ளிட்ட பகுதிகள் இந்த பிரிவில் இடம்பிடித்து உள்ளன.கொரோனா பாதிப்பு சதவீதம் 20 சதவீதத்திற்கு மேலும், ஆக்சிஜன் படுக்கைகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பிய பகுதிகள் 5-வது பிரிவில் இடம்பெற்று உள்ளன. இங்கு மாலை 4 மணி வரை அத்தியாவசிய கடைகளை திறக்க மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாளை முதல் அமல்
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தகவலில், வாரந்தோறும் வியாழக்கிழமை மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்கள், மாநகர பகுதிகளின் நோய் பாதிப்பு சதவீதம், ஆக்சிஜன் படுக்கைகள் விவரம் வௌியிடப்படும். அதன் அடிப்படையில் எந்தெந்த பகுதிகள், எந்த பிரிவில் வருகிறது என்பது முடிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்