ஊரடங்கில் சூதாட்ட விடுதி நடத்திய நடிகையின் தந்தை, குண்டர் சட்டத்தில் கைது

பெங்களூருவில் சூதாட்ட விடுதி நடத்திய கன்னட நடிகையின் தந்தையை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டு உத்தரவின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Update: 2021-06-07 16:48 GMT
பெங்களூரு, 

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூரு கண்ணிங்காம் ரோட்டில் உள்ள சூதாட்ட விடுதியில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி இருந்தார்கள். அங்கு சூதாட்டம் நடப்பது தெரியவந்தது. இதையடுத்த விடுதியில் சூதாட்டம் நடத்திய ஷெட்டி, சூதாட்ட விடுதியின் உரிமையாளர் உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்திருந்தனர்.

இவர்களில் ஷெட்டி, கன்னடத்தில் வெளியான முங்காரு மழை-2 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நேகாவின் தந்தையின் ஆவார். ஷெட்டி தான் சூதாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்ததும், ஊரடங்கு உத்தரவை மீறி அந்த விடுதியில் சூதாட்டம் நடந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ஷெட்டி உள்ளிட்டோர் மீது ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் குண்டர் சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இதனை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஷெட்டி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, ஊரடங்கின் போது சட்டவிரோதமாக சூதாட்டம் நடந்தது, அதற்கு ஏற்பாடு செய்திருந்தது சட்டப்படி குற்றமாகும் என்பதால், ஷெட்டி மீது பதிவாகி இருந்த குண்டர் சட்டத்தை ரத்து செய்ய மறுத்து விட்டது. மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் ஷெட்டி மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு, கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகை நேகாவின் தந்தையான ஷெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்