7 ஏக்கரில் குறுங்காடு வளர்ப்பு திட்டம்

காரைக்குடி அருகே 7 ஏக்கரில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

Update: 2021-06-08 18:32 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகே 7 ஏக்கரில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை கலெக்டர் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

கலெக்டர் ஆய்வு

காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்ட பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார். முதலில் ஜெயங்கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட சோழங்காடு கிராமத்தில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெரியகண்மாயில் 7 பாசன வாய்க் கால்கள் சீரமைக்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார். பணியாளர்களிடம் திட்டமிட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
பின்னர் நாட்டுச்சேரி ஊராட்சியில் ரூ.3.36 லட்சம் மதிப்பீட்டில் ஆஞ்சங்கால் வயல் வரத்துக்கால்வாய், ரூ.3.61 லட்சம் மதிப்பீட்டில் அப்பளை கண்மாய் வரத்துக்கால்வாய் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்படுவதை நேரில் பார்வையிட்டார்.

குறுங்காடு வளர்ப்பு திட்டம்

பின்னர் காரைக்குடியை அடுத்த அரியக்குடி ஊராட்சிக்குட்பட்ட நல்லப்பா நகர் பகுதியில் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டம் தொடக்க விழா நடந்தது.
இதில் ரூ.1½ லட்சம் மதிப்பீட்டில் 7 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வகை மரக்கன்றுகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி நடவு செய்து குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பும், பஞ்சாயத்துக்கு வருமானமும் அதிகரிக்கும். கலெக்டர் ஆய்வின்போது சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரதீப்குமார், ஜோசப், ஊரக வளர்ச்சித்துறை உதவி செயற்பொறியாளர் ரவிசங்கர், உதவி பொறியாளர் திருமேனி, ஜெயங்கொண்டான் ஊராட்சி மன்ற தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்