திருப்பத்தூர் அருகே; தே.மு‌.தி.க. பிரமுகர் அடித்துக்கொலை

திருப்பத்தூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-06-09 16:38 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே தே.மு.தி.க. பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க. பிரமுகர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள எர்ரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 45), தே.மு.தி.க. மாவட்ட செயலாளர். இவருடைய அண்ணன் மாதேஸ்வரன் (48). தே.மு.தி.க. ஊராட்சி செயலாளராக இருந்துவந்தார். மேலும் சுவீட் மாஸ்டராகவும் வேலை பார்த்து வந்தார். 

நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த ஞானவேல் (22), சுபாஷ், (20) ஆகியோர் சேர்ந்து ஹரிகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் ேபசி திட்டியதாகத் தெரிகிறது. இதுகுறித்து கேட்டபோது வாய்த்தகராறு ஏற்பட்டு, உங்களை பற்றி பேசவில்லை, எனக்கூறி அவர்கள் சமாதானமாகச் சென்று விட்டனர்.

தகராறு

அதைத்தொடர்ந்து மாலை ஹரிகிருஷ்ணனின் மனைவி அருணா அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஞானவேல் மற்றும் அவருடைய நண்பர்களான கதிர்வேல் (20), துளசி (27), சந்தோஷ் (25) ஆகியோர் மோட்டார்சைக்கிளில் வந்தனர். 

அவர்கள் அருணா மீது மோட்டார்சைக்கிளால் மோதுவதுபோல் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களின் செயலை அருணா தட்டிக்கேட்டபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அருணாவின் சத்தம் கேட்டு ஹரிகிருஷ்ணனின் அண்ணன் மாதேஸ்வரன் சம்பவ இடத்துக்கு வந்தார். 

அவர், ஞானவேலுவிடம் சென்று காலையில் எனது தம்பியிடம் தகராறு செய்தாய், இப்போது எனது தம்பி மனைவியிடம் ஏன் தகராறு செய்கிறாய்? எனத் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் இடையே தகராறு ஏற்பட்டது. 

பரிதாப சாவு

இதனால் ஆத்திரம் அடைந்த ஞானவேல் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து மாதேஸ்வரனை சரமாரியாக தாக்கினர். அதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே மாதேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

 இந்தக் கொலை சம்பவத்தால் எர்ரம்பட்டி கிராமத்தில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கந்திலி போலீசார் எர்ரம்பட்டி கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஞானவேல், கதிர்வேல், துளசி, சந்தோஷ் ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் தனிப்படை போலீசாரும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  அசம்பாவித சம்பவம் நடக்காமல் இருக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்