கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார்: விழுப்புரம் தனியார் பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் தனியார் பள்ளியில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Update: 2021-06-09 16:40 GMT
விழுப்புரம், 

கூடுதல் கல்வி கட்டணம்

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற சூழ்நிலையில் தற்போது கொரோனா 2-ம் அலை வேகமெடுத்து பரவி வருவதால் இதுநாள் வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.
கொரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே ஊரடங்கினால் பலரது குடும்பத்தினரின் வருமானம் குறைந்துள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 75 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.

தனியார் பள்ளியில் அதிகாரிகள் விசாரணை

இந்நிலையில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களின் பெற்றோர் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. இதுசம்பந்தமாக மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. மேலும் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கும் மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பப்பட்டது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணப்பிரியா, உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, விழுப்புரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) திருமாறன் ஆகியோர் சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை விவரம், கடந்த ஆண்டு கல்வி கட்டணம் செலுத்தப்பட்ட மாணவர்களின் விவரம், கல்வி கட்டணம் பெற்றதற்கான ஆவணங்கள், மற்ற பள்ளிகளிலும், இந்த பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பிற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம் ஆகியவை குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்தது.

அறிக்கை

இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், மாணவர்களின் பெற்றோர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கலெக்டர் உத்தரவின்பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணை முடிந்ததும் அதன் விசாரணை அறிக்கை கலெக்டரிடம் சமர்பிக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்