செவிலிய உதவியாளர் பணியிடை நீக்கம்

கொரோனா தடுப்பூசி போட்ட விவகாரத்தில் செவிலிய உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2021-06-09 16:57 GMT
புதுக்கோட்டை, ஜூன்.10-
புதுக்கோட்டை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிைலயத்தில்  கொரோனா தடுப்பூசி போட்ட விவகாரத்தில் செவிலிய உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
கொரோனா தடுப்பூசி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் மும்முரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் தடுப்பூசி டோஸ்கள் காலியானதால் கடந்த 3 நாட்களாக கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை. மாநில அரசுக்கு மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை வழங்கிய பின், மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளது. தடுப்பூசி வந்த பிறகே முகாம்கள் நடைபெறும் எனவும், தடுப்பூசி போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலிய உதவியாளர், ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் வைரலானது. அதில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர் பாலவிடுதி கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவர் ஆவார். இவரது அண்ணன் தமிழ்செல்வன், மராட்டிய மாநிலம் மும்பையில் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் செவிலிய உதவியாளர் கொரோனா தடுப்பூசி போட்டது குறித்து அறந்தாங்கி சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயக்குமார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தடுப்பூசி போட்டது செவிலிய உதவியாளர் செல்வம் என்பது தெரிந்தது.
மேலும் சம்பவத்தன்று செவிலியர் மற்றும் மருத்துவ அலுவலர் பணியில் இருந்தபோது அவர் தடுப்பூசி போட்டுள்ளார். இருவரும் பணியில் இருந்தபோது செவிலிய உதவியாளர் செல்வம் தடுப்பூசி போட்டது தவறு எனவும், அவரை பணியிடை நீக்கம் செய்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மருத்துவ அலுவலரிடம் விளக்கம்
மேலும் செவிலியருக்கு 17 பி குற்றச்சாட்டு குறிப்பாணையும், மருத்துவ அலுவலருக்கு குறிப்பாணை விளக்க கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செவிலிய உதவியாளர் கொரோனா தடுப்பூசி போட்ட விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மருத்துவமனை வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்