கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

ஊட்டியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2021-06-09 17:39 GMT
ஊட்டி,

ஊட்டியில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசார் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மக்கள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து தொற்று பரவல் அதிகரித்து வருவதால் சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தனியாக செயல்படும் காய்கறிகள், இறைச்சி, பலசரக்கு, மளிகை கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. 

கடந்த 2 வாரங்களாக தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருந்தனர். தற்போது கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் அத்தியாவசிய பொருட்களை வாங்க அதிகம் பேர் கூட்டமாக வந்து செல்கின்றனர். இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. 

ஊட்டி நகரில் நேற்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஸ் வரன், நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் பாபு மற்றும் போலீசார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

அறிவுரைகள்

கடைகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோ னா பரவலை கட்டுப்படுத்த இரட்டை முககவசம் அணிய வேண்டும். வீட்டில் ஒரு நபர் மட்டும் வந்து பொருட்களை வாங்கி செல்ல வேண்டும். நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதால் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஆடியோ ஒலிபரப்பு

இதேபோல் ஊட்டியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிப்பவர்கள் 14 நாட்கள் வெளியே வரக்கூடாது. வெளி நபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. 

மீறி வந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போலீசார் பேசும் ஆடியோ 2 வாகனங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒலிபரப்பப்படுகிறது. விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்