வீடுகளில் சாராயம் காய்ச்சிய 8 பேர் கைது

தேவகோட்டை, சிங்கம்புணரி பகுதிகளில் வீடுகளில் சாராயம் காய்ச்சிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-09 17:58 GMT
தேவகோட்டை,

தேவகோட்டை, சிங்கம்புணரி பகுதிகளில் வீடுகளில் சாராயம் காய்ச்சிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுக்கடைகள் மூடல்

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
டாஸ்மாக் மதுக்கடைகள், சலூன் கடைகள் மூடப்பட்டு உள்ளன. தற்போது மதுக்கடைகள் மூடப்பட்டு இருப்பதால் மது கிடைக்காமல் மதுபிரியர்கள் சிரமம் அடைந்தனர். சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்பட்டன. மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால் பலர் தாங்களாகவே வீடுகளில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தேவகோட்டை

அதன் அடிப்படையில் தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்து போலீஸ் சரகத்தை சேர்ந்த திராணி கிராமத்தை சேர்ந்த முத்துகண்ணு என்பவரது வீட்டில்  சாராயம் காய்ச்சுவதாக ேபாலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருவேகம்பத்து போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார்  அங்கு சென்று சோதனை நடத்தினர்.அப்போது அங்கு தயாராகி இருந்த 15 லிட்டர் சாராயத்தை போலீசார் அங்கேயே கீழே கொட்டி அழித்தனர்,. இதுதொடர்பாக முத்துக்கண்ணு(45) நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த துரை (35), செல்வம்(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அதேபோல் வெள்ளூர் கிராமத்தில் நாகராஜன்(48) என்பவர் வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 45 லிட்டர் ஊறலை கொட்டி அழித்தனர். பின்னர் நாகராஜனையும், அவருக்கு உதவியாக இருந்த முனியாண்டியும்(50)  கைது செய்தனர்.தேவகோட்டை அருகே உள்ள சாத்திக்கோட்டை காலனியில் வசிக்கும் அம்பாள் மணி(26) என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது சாராய ஊறல் வைத்திருந்த பானையை அழித்தனர். பின்னர் இது தொடர்பாக அம்பாள் மணியை போலீசார் கைது செய்தனர்.

சிங்கம்புணரி

 சிங்கம்புணரி ஒன்றியத்திற்குட்பட்ட அ.காளாப்பூரில் சுப்பையா மகன் சேவகமூர்த்தி (40) என்பவர் வீட்டில் எஸ்.வி.மங்களம் போலீசார் சோதனை நடத்திய போது 2 குடங்களில் சாராய ஊறல் வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை கைப்பற்றி போலீசார் அவரை கைது செய்தனர்.சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் கவுல் கொல்லை பகுதியில் சாராயம் வைத்திருந்த முஸ்தபா நகரைச் சேர்ந்த முருகேசன் (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்