கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்த 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த குமரி மாவட்டத்தில் பதுக்கி வைத்து இருந்த 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-09 18:22 GMT
குளச்சல்:
கேரளாவுக்கு கடத்த குமரி மாவட்டத்தில் பதுக்கி வைத்து இருந்த 3¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
கடத்தல் 
குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. அதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்தநிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் மரிய ஸ்டெல்லா, தனி வருவாய் ஆய்வாளர் செய்யது அலி ஆகியோர் நேற்று 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்'பிரிவில் பெறப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்கு குளச்சல் அருகே வாணியக்குடி பகுதிக்கு சென்றனர்.
ரேஷன் அரிசி
அப்போது அங்கு ஒரு தோப்பில் மறைவான இடத்தில் தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்த இடத்தை அவர்கள் சோதனை செய்தனர். அங்கு கேரளாவுக்கு கடத்துவதற்கு அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அதில் 60 மூடைகளில் 3¼ டன் ரேஷன் அரிசிகள் இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த அரிசி மூடைகளை மீட்டு உடையார்விளையில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்தனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் வாணியக்குடியில் கடத்துவதற்கு ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைத்திருந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பறிமுதல்
இந்தநிலையில் நித்திரவிளை போலீசார் நேற்று மதியம் இரையுமன்துறை மீனவ கிராமத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சுமார் 250 கிலோ ரேஷன் அரிசி்யை கேரளாவிற்கு கடத்துவதற்க்காக பதுக்கி வைத்திருந்ததை கண்டனர். அந்த அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அரிசி மூடைகள் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்