கர்நாடகாவில் இருந்து தர்மபுரிக்கு மோட்டார் சைக்கிள்களில் மது கடத்தி வந்த 5 பேர் கைது

கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரிக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 மதுபாட்டில்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2021-06-09 20:45 GMT
காரிமங்கலம்:
வாகன சோதனை
கர்நாடக மாநிலத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜய்சங்கர், செல்வராஜ், சபி மற்றும் போலீசார் நேற்று காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஅள்ளி சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி நோக்கி 3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி தர்மபுரிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 
5 பேர் கைது
அப்போது அவர்கள் ஓசூரை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 33), ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த காளிதாஸ் (28), கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தை சேர்ந்த நவீன்குமார் (25), தர்மபுரி சோகத்தூரை சேர்ந்த ஜெயவேல் (33), ரங்கநாதன் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
அவர்கள் 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது 2 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கடத்தி வந்த 300 கர்நாடக மதுபாட்டில்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்