ராயக்கோட்டையில் இரிடியம் தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் மோசடி; பொக்லைன் டிரைவர் கைது

ராயக்கோட்டையில் இரிடியம் தருவதாக கூறி ரூ.10 ஆயிரம் மோசடி செய்த பொக்லைன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-09 20:45 GMT
ராயக்கோட்டை:
இரிடியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் அன்பரசு (வயது 26). இவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர் தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகும் என்றும் கூறியுள்ளனர். மேலும் அதன் விலை ரூ.50 ஆயிரம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதனை உண்மை என்று நம்பிய அன்பரசு ரூ.10 ஆயிரம் தருவதாக அவர்களிடம் கூறினார். இதையடுத்து ரூ.10 ஆயிரத்தை அந்த நபர்களிடம் அன்பரசு கொடுத்துள்ளார். ஆனால் சொன்னபடி அந்த நபர்கள் இரிடியத்தை கொடுக்காமல் ரூ.10 ஆயிரத்தை மோசடி செய்தனர்.
கைது
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அன்பரசு, இதுகுறித்து ராயக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், அன்பரசுவிடம் இரிடியம் தருவதாக கூறி மோசடி செய்தது ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கரகூரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜா (வயது 32), சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் ஆகியோர் என்பது தெரியவந்தது. 
இதையடுத்து போலீசார் ராஜாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 போலி இரிடிய குடுவைகள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள மஞ்சுநாத், சரவணன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்