ஜோலார்பேட்டை வழியாக ஓடும் ரெயிலில் மதுபானம் கடத்தியவர் உள்பட 2 பேர் கைது

ஜோலார்பேட்டை வழியாக ஓடும் ரெயிலில் மதுபானம் கடத்தியவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-10 12:15 GMT
ஜோலார்பேட்டை,

கொரோனா பரவலால் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பலா் வெளி மாநிலங்களில் இருந்து ரெயிலில் மதுபானங்களை கடத்தி வந்து விற்கின்றனர். ஜோலார்பேட்டையில் நின்று செல்லும் ரெயில்களில் ஏறி ரெயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் நேற்று அதிகாலை மைசூர் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னையை நோக்கி செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையில் நின்றபோது, அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முரளிமனோகரன், ஜெயக்குமார் மற்றும் போலீசார் ஏறி சோதனைச் செய்தனர்.

அதில் சென்னை ஆடுதொட்டி நரசிம்மநகர் பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணியின் மகன் சதிஷ்குமார் (வயது 24) 45 மதுபானப் பாக்கெட்டுகள், 5 மதுபானப் பாட்டில்கள் ஆகியவற்றை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அவர் திருப்பூர் மாவட்டம் தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூர்த்தியின் மகன் ஞானப்பிரகாசம் (36) எனத் தெரிவித்தார். அவரிடம் 35 மதுபானப் பாக்கெட்டுகள், 3 மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானம் திருப்பத்தூர் மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பழனிமுத்துவிடம் ரெயில்வே போலீசார் ஒப்படைத்தனர். மேற்கண்ட இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்