நாகூர் பகுதியில் சாராயம் கடத்திய 9 பேர் கைது

நாகூர் பகுதியில் சாராயம் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்- காரை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-10 15:48 GMT
நாகூர்:
நாகூர் பகுதியில் சாராயம் கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்கள்- காரை பறிமுதல் செய்தனர்.

தீவிர வாகன சோதனை

கொரேனா வைரசை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 8-ந் தேதி முதல் காரைக்கால் மாவட்டம் கீழவாஞ்சூரில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாராயம்  மற்றும் மதுபானம் கடத்தல் சம்பவம் அதிக அளவில் நடைபெற வாய்ப்பு உள்ளதை அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்,  நாகூரை அடுத்த மேல வாஞ்சூர் சோதனைச்சாவடியில்  போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையில் மேலவாஞ்சூர் சோதனைச்சாவடி, நாகூர் - முட்டம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய இடங்களில் நாகூர்போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைது

இந்த நிலையில் சம்பவத்தன்று காரைக்காலில் இருந்து  நாகையை நோக்கி வந்த காரை நிறுத்தி  போலீசார் சோதனை செய்தனர். இதில்  10 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரில் வந்த 4  பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவாரூர் மாவட்டம் மாவூர் மேலத்தெருவை சேர்ந்த சாமிநாதன் மகன் ரகுவரன்( வயது 26), பொய்கைநல்லூர் மேலத்தெருவை சேர்ந்த தியாகராஜன் மகன் ராகுல் (26), அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தாமோதரன்(26), திருப்பூண்டி பாரதிநகரை  சேர்ந்த அந்தோணி அருள்தாஸ் மகன் அருள் ஆண்டனி ( 41) என்பதும், இவர்கள் காரில் சாராயம் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து  10 லிட்டர் சாராயத்தையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

இதபோல  கிழக்கு கடற்கரை சாலையில் 3 மோட்டார் சைக்கிள்களில்   சாராயம் கடத்தி வந்த திருவாரூர் மாவட்டம் புலிபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் தியாகு ( 28), நாகை கீச்சாங்குப்பம் சேவாபாரதி நகரை சேர்ந்த சேகர் (45), சிக்கல் கீழத் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வெங்கடேசன் ( 35), அதே பகுதியை சேர்ந்த எழிலரசன் மகன் கலையரசன் (28), கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிழக்கு தெருவை சேர்ந்த தமிழ்மோகன் மகன் பிரேம் குமார் ( 27) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 10 பீர் பாட்டில்கள், 10 சாராய பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்