நோயாளிகளின் உடலை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் பணியிட மாற்றம்

வேலூர் அரசு மருத்துவமனையில் இறந்த கொரோனா நோயாளிகளின் உடல்களை ஒப்படைக்க லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2021-06-10 16:55 GMT
அடுக்கம்பாறை

பணம் வசூல்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூர் மட்டுமின்றி ராணிப்பேட்ட, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்க படுகிறார்கள்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் நபர்களின் உடல்கள் பாதுகாப்பான முறையில் அரசின் இலவச அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் உடல்களுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை பணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

பணியிட மாற்றம்

இதில், பிணவறையில் பணியில் இருந்த சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன், உயிரிழந்த நபரின்  உறவினர்களிடம் லஞ்சமாக பணம் கேட்டு வாங்கி உள்ளார். உறவினர்களும் உடலை பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் வேறு வழியின்றி பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு உடலுக்கும் ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணத்தை வசூல் செய்துள்ளதாக  கூறப்படுகிறது. இது தொடர்பான புகார் வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு சென்றுள்ளது. அதன் பேரில் லஞ்சம் வாங்கிய சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். 

அதேபோன்று அரசு மருத்துவமனையில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றிய இளங்கோ, பிறப்பு மற்றும் இறப்பு சான்று வழங்கும் இடத்தில் பணியாற்றிய மற்றொரு வெங்கடேசன் ஆகியோரும்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புகாருக்குள்ளான சுகாதார ஆய்வாளர் வெங்கடேசனிடம், விளக்கம் கேட்டு சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரால் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் அவரை விசாரிக்க விசாரணை குழு அமைத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேலூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், சென்னை தலைமையிடத்து சுகாதாரத் துறைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்