லாரியில் மதுபாட்டில்கள் கடத்தல்; டிரைவர் உள்பட 2 பேர் கைது

நிலக்கரி சாம்பல் ஏற்றிச்சென்ற லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-10 20:29 GMT
ஆண்டிமடம்:

தப்பியோட முயன்றனர்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீசாருக்கு, ராட்சத லாரியில் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் பெரியாத்துக்குறிச்சி சோதனைச்சாவடி வழியாக செல்ல முயன்ற ராட்சத லாரியை மறித்து நிறுத்தினர்.
போலீசாரை கண்டதும் லாரியை நிறுத்திவிட்டு, அதனை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்தவர் தப்பித்து ஓட முயன்றனர். அவர்களை, போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
61 குவார்ட்டர் பாட்டில்கள் பறிமுதல்
இதில் அவர்கள், ஆண்டிமடம் அருகே உள்ள கூவத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி(வயது 47), அதே ஊரில் தோப்பு தெருவை சேர்ந்த ராஜேஷ்(23) என்பதும், அவர்கள் நெய்வேலியில் இருந்து கும்பகோணத்திற்கு லாரியில் நிலக்கரி சாம்பல் அள்ளிச்சென்றதும், தெரியவந்தது.
மேலும் லாரியின் உள்ளே சோதனை செய்தபோது, அதில் 61 குவார்ட்டர் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததும், தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களுடன் லாரியை பறிமுதல் செய்து, அரோக்கியசாமி, ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்